பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

சேலம் ரயில்வே பெண் ஊழியரிடம் ரூ.5.10 லட்சம் மோசடி: பொறியாளர் கைது

வி.சீனிவாசன்

சேலம் ரயில்வே பெண் ஊழியரிடம் ரூ.5.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பொறியாளரை சூரமங்கலம் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள சித்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா (26). இவர், சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். சித்தனூரைச் சேர்ந்த பொறியாளர் அந்தோணி மணிவேல் (32) ஆன்லைன் மூலம் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார்.

மார்க்கெட்டிங் தொழிலில் முதலீடு செய்தால், வாரம் ஒரு முறை ரூ.15 ஆயிரம் வரை லாபம் பெறலாம் என்று அந்தோணி மணிவேல், ரயில்வே கோட்ட பெண் ஊழியர் மோனிஷாவிடம் கூறியுள்ளார். இவரின் பேச்சை நம்பி மோனிஷா, ரூ.5.10 லட்சம் மார்க்கெட்டிங் தொழிலில் முதலீடு செய்துள்ளார்.

ஆனால், முதலீடு தொகைக்கான லாபத் தொகை ஏதும் கொடுக்காமல் அந்தோணி மணிவேல், மோனிஷாவை ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து மோனிஷா சூரமங்கலம் போலீஸில் அந்தோணி மணிவேல் மீது புகார் அளித்தார்.

இப்புகார் மீது சூரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், அந்தோணி மணிவேல், மோனிஷாவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்தோணி மணிவேலை சூரமங்கலம் போலீஸார் இன்று (ஜூன் 9) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மேலும் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா, யார் யாரிடம் எவ்வளவு பணம் பெற்று மோசடி செய்தார் என்பது குறித்து சூரமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT