சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் மாடு மற்றும் கன்றுகளுடன் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் – சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுத் தாக்கல் செய்ததைக் கண்டித்தும், எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாகப் பேசிய தமிழக அமைச்சர்களைக் கண்டித்தும் சேலத்தில் விவசாயிகள் தொடர்ந்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வட்டக்காடு மற்றும் குள்ளம்பட்டி பகுதியில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 32 விவசாயிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்தும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டியும் இன்று (ஜூன் 9) விவசாயிகள் மாடு, கன்றுகளுடன் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் எருமாபாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், தங்களது மாடு மற்றும் கன்றுகளுடன் திரண்ட விவசாயிகள், கைகளில் கருப்புக் கொடியை ஏந்தியபடி, கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாகப் பேசிய அமைச்சர்களைக் கண்டித்து கோஷம் எழுப்பிய விவசாயிகள், எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டியும் போராட்டம் செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும் போது, "மத்திய மற்றும் மாநில அரசுகள், விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. விவசாய நிலங்களை அழித்திடத் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது உரிமைக்காகப் போராடினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை மிரட்டி வருகின்றனர். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்" என்றனர்.