தமிழகம்

தூத்துக்குடி வானொலி நிலைய ஒலிபரப்பை மீண்டும் தொடங்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி கடிதம்

ரெ.ஜாய்சன்

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய ஒலிபரப்பை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும் என கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு கடந்த இரண்டரை மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு சார்ந்த தகவல்களை தூத்துக்குடி மாவட்ட மக்கள் இந்த வானொலி மூலமே பெற்று வந்தனர்.

தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அரசு தகவல்களை சரியான நேரத்தில் மக்கள் அதிகாரப்பூரமாக அறிந்து கொள்ள தூத்துக்குடி வானொலி நிலையத்தின் ஒலிபரப்பை மீண்டும் உடனடியாக தொடங்குவது அவசியம்.

எனவே, கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய ஒலிபரப்பையும் மீண்டும் உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT