கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்காமல் தமிழக அரசு கைக்கழுவி விட்டது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து இன்று (ஜூன் 9) ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அப்போது, கரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.12 ஆயிரத்து 500, மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும், 200 நாள் வேலைவாய்ப்பை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், சிறு, குறு தொழில் புரிவோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும், தனியார் மற்றும் வங்கி கடனுக்கான வட்டியை ஆறு மாத காலத்திற்கு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கரோனா வைரஸ் தொற்றுக்கு அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நகர செயலாளர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் தனிமனித இடைவெளியுடன் குறைந்த அளவில் கட்சியினரை கொண்டு நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். ஏனென்றால் கரோனா வைரஸ் மேலும் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மக்கள் வேலைவாய்ப்பு வியாபாரம், அனைத்தும் இழந்து கோடிக்கணக்கான கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நிதி வழங்கி குடும்பத்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
மக்கள் கையில் பணம் இருந்தால் தான் தொழிற்சாலை உற்பத்தியை பெருக்க முடியும் ,மாதாமாதம் நிதி வழங்கினால் தான் அவர்கள் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். எனவே மக்களுக்கு மாதந்தோறும் மத்திய அரசு ரூ.7,500 வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 22 பேர் மரணமடைகின்றனர். ஆனால், அரசு கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. சென்னை மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது. இதை கட்டுப்படுத்த வழி தெரியாமல், அரசு நேர்மாறாக அறிக்கைவிட்டு மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என கூறிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க நோயாளிகளை மறுத்து வருகிறார்கள். எனவே, அரசு தனியார் மருத்துவமனையை கையகப்படுத்தி 25 சதவீதம் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவாதம் பெற்றுத்தர வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசே எடுத்து மருத்துவ வசதியை மக்களுக்கு செய்து தர வேண்டும். ஆனால், மக்களுக்கு மருத்துவ வசதிகளை அரசு செய்ய மறுக்கிறது. மக்களை மக்களே பாதுகாத்துக் கொள்ளட்டும் என அரசு கைக்கழுவி விட்டதாகவே நான் உணர்கிறேன்.
வருகிற செப்டம்பர் மாதம் அதிக பாதிப்பு ஏற்படும். இதனால் மக்கள் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என அரசு, நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கிறது. இதற்கு மாற்று என்ன என்று அரசு கூறவில்லை. இதனால் பட்டினிச் சாவுகள் ஏற்பட நேரிடும். மக்களை பாதுகாத்திட அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு கேட்கின்ற நிதி எதையும் மத்திய அரசு வழங்கவில்லை. எனவே கூடுதல் நிதி வழங்க வேண்டும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.