பரதநாட்டியம், கர்நாடக இசை வாய்ப்பாட்டு கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை:
"இயல், இசை, நாடகம் என்பது நம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம். அதனை பேணிக்காப்பதும் வளர்ப்பதும் நமது கடமை. கரோனா தாக்கத்தால் பல்துறையும் பாதிக்கப்பட்டு அனைவரும் பொருளாதார இழப்பால் தவித்துவரும் சூழ்நிலை நாடெங்கும் நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் பரதநாட்டிய வகுப்புகளையும் கர்நாடக சங்கீதம் வாய்பாட்டு, பல்வேறு இசைக் கருவிகளை கற்றுத்தரும் ஆசிரியர்கள் வாடகை இடத்தில் தான் வகுப்புகளை நடத்துகின்றனர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் கரோனா வைரஸ் தொற்றால் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு கருணையோடு மூன்று மாதங்களுக்கு கட்டிட உரிமையாளர்கள் வாடகையை கேட்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இருந்தும் பலர் வாடகையை கட்டாயப்படுத்தி கேட்பதும் தரவில்லை இல்லையென்றால் இடத்தை காலி செய்யுமாறும் நிர்பந்திப்பதும் மனிதாபிமானமற்றச் செயலாகும்.
ஊடரங்கு உத்தரவால் வருமானமின்றி தவிக்கும் பரதநாட்டிய கலைஞர்கள், இசை பயிற்சி மற்றும் இசைக்கருவிகள் பயிற்சி ஆசிரியர்கள், கர்நாடக இசை வாய்பாட்டு ஆசிரியர்கள் வகுப்பை தொடங்கியவுடன் வாடகை பாக்கியை சிறிது சிறிதாக செலுத்தி விடுவார்கள். இதற்கு கட்டிட உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதோடு ஊடரங்கு உத்தரவால் வருமானம் இன்றி தவிக்கும் இவர்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.