தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்குக் கடற்பகுதி களில் மீன் இனப் பெருக்கத்துக்கும், மீன்வளத்தைப் பாதுகாத்திடவும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடித் தடைக்காலமாகும்.
பாம்பன் கடற்கரையில் கூடைகளில் அடுக்கி் வைக்கப்பட்டிருந்த மீன்கள். முன்னதாக கரோனாவால் சமூக இடைவெளி அவசியம் என விசைப்படகு மீனவர்கள் மார்ச் 20 முதல் கடலுக்குச் செல்லவில்லை.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலத்தை ஏப். 15 முதல் மே 31 வரை என 47 நாட்களாகக் குறைத்து மத்திய மீன் வள அமைச்சகம் உத்தரவிட்டது.
ஆனால், ராமநாதபுரம் மாவட் டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடந்திய பேச்சுவார்த்தைக்குப் பின் குறைந்த படகுகளில் நிபந்தனை களுடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 75 நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நேற்று பாம்பன் மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பினர்.
தடைக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு சீலா, பாறை, திருக்கை, முக்கனி, கட்டா நகரை போன்ற விலை உயர்ந்த மீன்கள் உட்பட ஒவ்வொரு படகுக்கும் சுமார் 500 கிலோ முதல் ஒரு டன் வரையிலும் மீன்கள் கிடைத்தன. மீன்களை ஏலம் விடும் கூடத்துக்குக் கொண்டு வந்து சிறிய, பெரியரக மீன்கள் மற்றும் உயர் ரக மீன்கள் என தனித்தனியாகப் பிரித்து ஏலம் நடந்தது.
பெரிய ரக சீலா மீன் கிலோ ரூ.750-க்கும், பாறை மீன் ரூ.300-க்கும், திருக்கை அதிகபட்சமாக ரூ.80-க்கும் விற்பனையானது. இதில் ஒரு மீனவர் பிடித்து வந்த 30 கிலோ எடை கொண்ட பாறை மீனை ஏலம் எடுக்க வியாபாரிகள் போட்டி போட்டனர். இதனால் அந்த ஒரு மீன் மட்டும் ரூ.10 ஆயிரத்துக்கு விலை போனது.