தமிழகம்

சர்ச்சைக் காணொலி விவகாரம்: செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது போலீஸ் வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா சிகிச்சைக்கான அனுமதியைப் போட மறுப்பதாகவும், படுக்கைகள் இல்லை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து காணொலி பதிவிட்ட முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. 30 ஆயிரத்தைக் கடந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கு மேல் தொற்றுள்ளவர்கள் சென்னையில் உள்ளனர்.

சென்னையில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் குறைவாக இருப்பதாகவும், நோயாளிகள் சிகிச்சைக்காகச் செல்லும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இல்லை என்றும், படுக்கைகள் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், நேற்று செய்தி வாசிப்பாளரும், நாடக நடிகருமான வரதராஜன் ஒரு காணொலியை வெளியிட்டு இருந்தார்.

அது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினரை சிகிச்சைக்காக அனுமதிக்க பல மருத்துவமனைகளுக்கு அலைந்ததாக உருக்கத்துடன் பேசியிருந்தார். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதிக்க பல மருத்துவமனைகளை அணுகியதாகவும் படுக்கை இல்லை என மறுத்துவிட்டதாகவும், இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேசியும் பயனில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொதுமக்கள் இந்த நிலையில் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் இன்றைய நிலை. தயவுசெய்து முகக் கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது, அவசியமின்றி வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வெளியில் சென்றால் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை அணிந்து முறையாக சமூக விலகலுடன் சென்று வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்தக் காணொலி மிகவும் வைரலானது. சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்கப் போதிய வசதிகள் இல்லை என்ற செய்தி பரவியது.

இந்நிலையில் இன்று சென்னையில் ரிப்பன் மாளிகையில் அமைச்சர்களுடன் ஆலோசனை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் வரதராஜன் கருத்தை மறுத்தார். தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மிகக் கடுமையாகப் போராடி வருகிறது. சிகிச்சையில் குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர்.

தொற்றைக் குறைக்கும் வகையில் போராடி வரும் இந்த வேளையில் அரசின் செயல்பாட்டைப் பாராட்டவிட்டாலும் பரவாயில்லை. இதுபோன்ற தவறாக விமர்சிக்க வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார். வரதராஜன் தவறான தகவலைப் பதிவு செய்துள்ளார். சென்னையில் அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. வரதராஜன் என்னுடன் வந்து எந்த மருத்துவமனையில் படுக்கை இல்லை என நிரூபிக்கத் தயாரா? என கேள்வி எழுப்பினார்.

வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தவறான தகவலை வெளியிட்டதால், பொதுமக்களைப் பயமுறுத்தும் விதத்தில் காணொலி வெளியிட்டதால் அவர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் சுகாதாரத்துறை இயக்குனர் அளித்த புகாரின் பேரில் வரதராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வதந்தி பரப்புதல் (153), உள் நோக்கத்தோடு தவறான தகவலைப் பரப்புதல் (505 (1) ( b)), அரசு உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தல் (188) , தொற்று நோய் பரவல் தடுப்புச்சட்டம் (3 of epidemic diseases act), (54 of disaster management) பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வரதராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT