தேர்வு இல்லாமல் மாணவர்களைத் தேர்ச்சி செய்வதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுத் தேதி, பிளஸ் 2 வகுப்பின் எஞ்சிய ஒரு நாள் தேர்வுத் தேதியை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர்களின் மனநலன், உடல் நலன் குறித்த புரிதல் இன்றி தன்னிச்சையாக இப்படி அறிவிப்பதா என்ற விமர்சனம் எழுந்தது.
தேர்வு அட்டவணையைத் திரும்பப் பெற வேண்டும், ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தபின் தேர்வு நடத்த வேண்டும், ஊரடங்கு விலக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு அதன் பின்னர் 15 வகுப்பு நாட்கள் அந்த மாணவர்கள் வருவதை அனுமதித்துவிட்டு அதன் பின்னர்தான் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடர்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தற்போதிருக்கும் தொற்றுச் சூழலையும், பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அனுபவித்து வரும் மன அழுத்தத்தையும் கருத்தில் கொண்டு, தேர்வு இல்லாமல் மாணவர்களைத் தேர்ச்சி செய்வதை அரசு பரிசீலிக்க வேண்டும்".
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.