தமிழகம்

ரிசர்வ் வங்கி அறிவிப்பை மீறி தவணை வசூல்: நுண்கடன் நிறுவனங்கள் மீது தொடரும் புகார்கள்

கே.கே.மகேஷ்

பொதுமுடக்கத்தால் ஒவ்வொரு தனிநபருக்கும், நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் வகையில் அவர்களது வங்கிக் கடனுக்கு 6 மாத காலத் தவணை விடுப்பு கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. இந்த உத்தரவு நுண் கடன் (மைக்ரோ ஃபைனான்ஸ்) நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாலும், அவர்கள் அதைக் கடைப்பிடிக்காமல் கிராமப்புறப் பெண்களையும், மகளிர் குழுவையும் தவணை கேட்டுத் தொந்தரவு செய்வதுடன், மிரட்டுவதாகப் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதுகுறித்து சில மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்தும்கூட அவர்கள் அதைக் கைவிடவில்லை.

இந்த நிலையில் இன்று மாலை, மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தனக்கன்குளம் ஊராட்சி உறுப்பினருமான ச.ஜெகநேசன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ''மத்திய - மாநில அரசுகளின் அறிவிப்பையும் மீறி எங்கள் பகுதியில் கிராம விடியல், சிகரம் மைக்ரோ ஃபைனான்ஸ், எல் அன்ட் டி மைக்ரோ ஃபைனான்ஸ், மகா சேமம், ஸ்மைல் மைக்ரோ ஃபைனான்ஸ், கான்ஸ்ட்ரோ, ஆசீர்வாதம், மகா சக்தி போன்ற நுண்கடன் நிறுவனங்கள் தொடர்ந்து தவணை மற்றும் வட்டி வசூலில் ஈடுபடுகின்றன. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பிலும் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுவினர் சிலர், இன்று அவனியாபுரம் காவல் நிலையத்திலும் இதுகுறித்துப் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் சார்பில் மதுரை மாவட்ட அமைப்பாளர் நிவேதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். எனவே, சிவகங்கை மாவட்ட ஆட்சியரைப் போல மதுரை ஆட்சியரும் நுண்கடன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று கருத்து நிலவுகிறது.

SCROLL FOR NEXT