தமிழகம்

கரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி வழக்கு: இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

கி.மகாராஜன்

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் 66 மூலிகைகள் அடங்கிய சித்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி கோரி தாக்கலான மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய இம்ப்ரோ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கரோனா நோயிலிருந்து விடுபடலாம்.

இந்த மருந்தால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் வாதம், பித்தம், கபம் ஆகியன சரிபங்கில் இருக்க செய்யும். அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இம்ப்ரோ மருந்துக்கு உள்ளது.

சீனாவில் கரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியும். எனவே இம்ப்ரோ மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே கரோனா நோயை குணப்படுத்தும் சித்த மருந்தான இம்ப்ரோவை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT