ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வந்த 111-வது வகை வண்ணத்துப்பூச்சியாக 'காமன் ஷாட் சில்வர்லைன்' இன்று கண்டறியப்பட்டது. அதேபோல இங்கு வந்த 86-வது பறவை இனமாக சின்ன தோல் குருவி இன்று ஆவணப்படுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் 27 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களுள் ஒன்றாக விளங்குவதால் இங்கு, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
2013-ம் ஆண்டு தொடங்கியபோது 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் மட்டுமே இப்பூங்காவில் இருந்தன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் வண்ணத்துப்பூச்சிகள் மிகவும் விரும்பக்கூடிய எருக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஆமணக்கு, வில்வம், செண்பக மரம், தலைவெட்டிப்பூ, நாயுருவி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தாவர வகைகளை அதிக அளவில் வளர்க்கத் தொடங்கினர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் இங்கு வரத் தொடங்கின. அவை ஒவ்வொன்றையும் வனத்துறையினரும், வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியாளர்களும் இணைந்து படம்பிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2018 மே மாதத்தில் இங்கு 100-வது வகை வண்ணத்துப்பூச்சியாக 'கூரான பிசிருயிர் நீலன்' அடையாளம் காணப்பட்டது. அதன்பின் அவ்வப்போது ஒவ்வொரு வகையாக கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 111-வது வகை வண்ணத்துப்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது.
111-வது வண்ணத்துப்பூச்சி, 86-வது வகை பறவை இனம் ஆகியவற்றை இளநிலை ஆராய்ச்சியாளர் முத்து கிருஷ்ணன் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார்
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதா கேட்டபோது, "இப்பூங்காவில் 'காமன் ஷாட் சில்வர்லைன் என்ற வகையைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சி 111-வது வகையாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வறண்ட நிலப்பரப்பில் வசிக்கக்கூடிய அரிய வகை வண்ணத்துப்பூச்சிகளில் இதுவும் ஒன்று. கடந்த வாரம் 110 வகையாக இதேபோன்று இங்கு வரக்கூடிய ஒவ்வொரு வகை வண்ணத்துப்பூச்சியையும் ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.
இதுகுறித்து ஆக்ட் பார் பட்டர்பிளைஸ் அமைப்பின் நிறுவனரான மோகன் பிரசாத் கூறும்போது, "இந்த வகை வண்ணத்துப்பூச்சிகளில் வால் பகுதியும், முகம்போலவே தோற்றமளிக்கும். எனவே இவற்றை வேட்டையாட வரும் உயிரினங்கள், முகம் என தவறாகக் கருதி பின்பகுதியைப் பிடிக்கும்போது, வால் பகுதியிலுள்ள இறகுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு எளிதில் தப்பிச் சென்றுவிடுவது இதன் சிறப்பு" என்றார்.
சின்ன தோல் குருவி
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் இப்பூங்கா அமைந்திருப்பதால் வண்ணத்துப்பூச்சிகள் மட்டுமின்றி ஏராளமான பறவை இனங்களும் இங்கு வந்து செல்கின்றன. அவற்றையும் வனத்துறையினர் கணக்கிட்டு வரும் நிலையில், 86-வது வகை பறவை இனமாக சின்ன தோல் குருவி இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவற்றையும் வனத்துறையினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.