சென்னையிலிருந்து வந்தவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனி அம்பேத்கர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கு கடந்த 1-ம் தேதி சென்னையிலிருந்து 55 வயதான ஆடிட்டர் சாலை மார்க்கமாக வந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கரோனா உறுதியானதையடுத்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையிலிருந்து வந்து 2 நாட்கள் வீட்டில் தங்கியிருந்ததால், அவர் வசித்த 4 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 குடும்பங்கள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுத் தர மாநகராட்சி அலுவலர் ஒருவர் தலைமையில் 3 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, 7-ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்த 31 வயதான தாய், அவரது 4 வயது மகன், மும்பையிலிருந்து ரயில் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோவை வந்த 70 வயது முதியவர், சென்னையிலிருந்து கார் மூலம் கோவை வந்த 36 வயது ஆண், திருப்பூரில் இருந்து கோவை வந்த அரசு மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நர்சிங் மாணவிக்கு கரோனா ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாணவி தங்கியிருந்த செவிலியர் விடுதியின் முதல் தளம் மூடப்பட்டதுடன், மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, வெளி மாநிலங்கள், சென்னையிலிருந்து வருபவர்கள் கரோனா பரிசோதனையைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.