இரண்டு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன என்றாலும், உள்ளூர் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் களையிழந்து காணப்படுகின்றன. கோடைக் காலத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும், கேரளத்தையும் ஈர்க்கிற மலைகளின் இளவரசியான கொடைக்கானல், காத்தாடுகிறது. இத்தனைக்கும் மதுரை, திண்டுக்கல், தேனி, வத்தலகுண்டு ஆகிய ஊர்களில் இருந்து கொடைக்கானலுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் செக்போஸ்ட் அமைத்து வெளியூர்க்காரர்கள் யாராவது பேருந்தில் வருகிறார்களா என்று பரிசோதிக்கப்படுவதால் சுற்றுலா செல்ல முடியாத சூழல். அதேபோல கார், வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் மலையடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன.
இதேநிலைதான் ராமேஸ்வரத்திலும். மதுரை மண்டலத்திற்குள் உள்ள மாவட்டங்களில் இருந்து இங்கே கார் உள்ளிட்ட வாகனங்களில் வரத் தடையேதும் இல்லை. அதன்படி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தினருக்குப் பிரச்சினை இல்லை என்றாலும் கூட, அவர்களது வாகனங்கள் ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகிலேயே தடுக்கப்படுகின்றன. அதேபோல தனுஷ்கோடி செல்லும் சாலையிலும் அனுமதியில்லை. கோயில், பூங்காக்கள், சுற்றுலா மையங்களுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடப்பதால் உள்ளூர் சுற்றுலாவுக்கும் வழியின்றிக் கிடக்கிறது. வரும் வழியில் இருக்கிற அரியமான் கடற்கரைக்குச் செல்லக்கூட அனுமதியில்லை.
இதேநிலைதான் தென்மாவட்டத்தின் மற்றொரு முக்கிய சுற்றுலாத்தலமான குற்றாலத்திலும் நிலவுகிறது. அங்கே கடந்த ஒரு வாரமாக சீசன் களைகட்டிவிட்டது என்றாலும், சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்க்காரர்களுக்கே குளிக்க அனுமதியில்லை.
வழிபாட்டுத் தலங்களை இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. அதைப் போலவே தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்லவும் மத்திய அரசு அளித்த அனுமதியை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால் இன்று நாட்டின் பிற பகுதிகளில் தொல்லியியல் தளங்கள் திறக்கப்பட்டதைப் போல, மதுரை திருமலை நாயக்கர் மகால், யானைமலை சமணர் குகை, கமுதி கோட்டை, ராமநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட இடங்கள் திறக்கப்படவில்லை.
அந்தந்த மாவட்ட மக்களை மட்டுமாவது இதுபோன்ற சுற்றுலாத் தலங்களுக்கு தனிமனித இடைவெளியுடன் அனுமதித்தால், கரோனா மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் சிறு வணிகர்கள், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் வருமானம் கிடைக்கும்.
செய்யுமா அரசு?