திருச்சி அருகே வயல் பகுதியில் வெடிபொருளுடன் வைக்கப்பட்டிருந்த இறைச்சியைக் கடித்தபோது, அது வெடித்துச் சிதறியதில் நரியின் வாய் கிழிந்து உயிரிழந்தது. கொடூரமான முறையில் வேட்டையில் ஈடுபட்டதாக 12 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி, வயல் பகுதிகளுக்குள் சென்று நடமாடுகின்றன. இவற்றை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. எனவே, இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய வனத்துறையினரும், போலீஸாரும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பேரூர் பகுதியில் இன்று (ஜூன் 8) காலை சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு கும்பலை, விஜயராகவன் என்ற காவலர் பிடித்து விசாரித்தார். அப்போது அவர்கள் கொண்டு வந்த ஒரு சாக்குப் பையில் வாய் கிழிந்து இறந்த நிலையில் ஒரு நரி இருந்தது. தகவலறிந்த இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீஸார் அங்கு சென்று 12 பேரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் திருவெறும்பூர் அருகேயுள்ள பூலாங்குடி காலனியைச் சேர்ந்த ராம்ராஜ் (21), சரவணன் (25), ஏசுதாஸ் (34), சரத்குமார் (28), தேவதாஸ் (41), பாண்டியன் (31), விஜயகுமார் (38), சத்தியமூர்த்தி (36), சரத்குமார் (26), ராஜமாணிக்கம் (70), ராஜூ (45), பட்டம்பிள்ளை(78) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் இவர்களை திருச்சி வனச் சரகர் குணசேகரன், வனவர்கள் கோடீஸ்வரன், சரவணன் உள்ளிட்டோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். பிடிபட்ட 12 பேரிடமும் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "துப்பாக்கியால் சுடுவது, ஈட்டியால் குத்துவது, வலை விரித்து வேட்டையாடுவதைப் போல இறைச்சிக்குள் நாட்டு வெடியை மறைத்து வைத்து, அதைக் கடிக்கும் வன உயிரினங்கள் வலியால் நிலைதடுமாறி கீழே விழும்போது அவற்றைப் பிடிப்பதும் ஒருவகையான வேட்டை முறை. இந்த முறையைப் பின்பற்றியே தற்போது இந்த நரியையும் வேட்டையாடியுள்ளனர்.
இறைச்சியைக் கடித்தபோது, அதிலுள்ள வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் இந்த நரியின் வாய் கிழிந்து இறந்துவிட்டது. தற்போது பிடிபட்டுள்ள அனைவரும் தேன் எடுப்பதற்காக அப்பகுதிக்கு வந்தபோது நரி இறந்து கிடந்ததாகவும், அதை தாங்கள் எடுத்துச் சென்றபோது போலீஸார் பிடித்துக் கொண்டதாகவும் கூறிவருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது. பிடிபட்ட 12 பேரிடமும் வனத்துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்" என்றனர்.
கேரளாவில் உணவுப்பொருளைச் சாப்பிட்டபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து சினை யானை உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சியிலும் அதேபோன்ற முறையில் ஏற்பட்டுள்ள நரியின் உயிரிழப்பு, வன ஆர்வலர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.