கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

போராடிப் பெற்ற இலவச மின்சாரத்தை ரத்து செய்வதா? - கோவையில் விவசாயிகள் போராட்டம்

ஆர்.கிருஷ்ணகுமார்

பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் கிடைத்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கோவையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (ஜூன் 8) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 1984-ம் ஆண்டு முதல் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. மேலும், ஏராளமானோர் விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.

வறட்சி, வெள்ளம், பூச்சி தாக்குதல், விலங்குகளால் சேதம், கட்டுப்படியான விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் ஏற்கெனவே பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கச் செய்யும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும், தட்கல் அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT