தமிழகம்

குமரியில் கரோனா தடுப்புப்பணிகள்: அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையைக் கேட்டு நடக்க காங்கிரஸ் கோரிக்கை

என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

சென்னை உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்து வருவோர், மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பின்புதான் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஆனாலும் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டால் இன்னும் சிறப்பான சில பணிகளை முன்னெடுக்க முடியும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக குமரி கிழக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று காங்கிரஸார், ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.

அதில், ‘கரோனா காலகட்டத்தில் மின் கட்டணங்கள் பொது மக்களுக்குச் சூடு வைக்கின்றன. எதனால் இவ்வளவு பெரிய தொகை வந்திருக்கிறது எனத் தெரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர். கரோனா காலத்தில் நடக்கும் மின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

கரோனா பணிகளை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க குமரி மாவட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை கேட்க வேண்டும். கரோனா சிகிச்சைக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கவேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT