மின்சார வசதி வழங்க முடியாத வனப்பகுதிகளில் உள்ள 105 கிராமங்களுக்கு ரூ.7.13 கோடி யில் சூரியசக்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித் துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), ‘‘தனியார் எஸ்டேட் முதலாளிகள் நன்கொடை தர தயாராக இருப்பதால் மேகமலை பகுதியில் தரைவழி கேபிள்கள் அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:
மின்சார வசதியை ஏற்படுத்த பணம் ஒரு பிரச்சினை அல்ல. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதி மேகமலை ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் உள்ளன. எனவே, அங்கு மின்சாரம் வழங்கு வதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. எனவே, இப்பகுதிகளில் தரைவழி கேபிள்கள் மூலம் மின்சாரம் வழங்க இயலாது.
மேகமலை பகுதி மலை கிராமங்களுக்கு சூரியசக்தி மின்சாரம் வழங்க ரூ. 1.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ள 105 மலை கிராமங்களுக்கு ரூ. 7.13 கோடியில் சூரியசக்தி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மின்சாரம் வழங்கு வதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கான முயற்சியிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.