தமிழகம்

உலக கலாச்சாரத் திருவிழாவில் பங்கேற்க தமிழக இசைக் கலைஞர்களுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

வாழும் கலை நிறுவனம் சார்பில், 2016 மார்ச் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள உலக கலாச்சாரத் திருவிழாவில் பங்கேற்க தமிழக இசைக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இசையில் இந்தியாவின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, வாழும் கலை நிறுவனம், இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் சங்கீத நாடக அகாடமி இணைந்து, 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் 13 வரை புது டெல்லியில் உலக கலாச்சாரத் திருவிழாவினை நடத்தவிருக்கின்றன.

இவ்விழாவில் இந்தியா மற்றும் பல நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.

வாழும்கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ரவிசங்கர் ஊக்குவித்தலில் நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சி, வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், கஞ்சிரா, கடம் மற்றும் தவில் வாசிக்கும் திறனுள்ள அனைத்து இசைக் இசைக்கலைஞர்களும் பங்கேற்று தம் திறனை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் ஆகும்.

வாழும்கலையின் 35-வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் நிகழ்ச்சியில் 150 நாடுகளிலிருந்து 35 லட்சம் மக்கள் பங்கேற்பர்.

இசைக்கருவியில் 3 ஆண்டுகளாவது அனுபவம் கொண்டவராகவும், 15 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்கும் மாணவர்களை, வாழும்கலையின் தமிழ்நாடு பிரிவு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரவேற்கிறது. முன்பதிவுகள் இலவசம். அவை செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடையும்.

மேலும் விபரங்களுக்கு 9884017767 என்னும் எண்ணை அழைக்கவும். அல்லது raji.swaminathan@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT