வெறும் வாய்ச்சவடாலில் புள்ளி விவரங்களை அள்ளித்தெளிக்காமல் சென்னையில் கரோனா கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னையின் 5 மண்டலங்களை கடும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,156 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 20,993 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 22149 ஆக அதிகரித்துள்ளது.
1,515 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 76.30 சதவீதத் தொற்று சென்னையில் (1,156) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 31,667-ல் சென்னையில் மட்டும் 22,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 69.94 சதவீதம் ஆகும்.
சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 269 பேரில் சென்னையில் மட்டுமே 212 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 78.81 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 22,149-ல் 212 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் .95% என்கிற எண்ணிக்கையில் உள்ளது.
இதுகுறித்து அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அவரது முக நூல் பதிவு:
"இயற்கையை வென்றோம்; சவால்களைச் சந்தித்தோம்; இறப்பு விகிதம் உலகத்திலேயே குறைவு" என்று வாய்ச்சவடால் செய்வதை விடுத்துச் செயல்பாட்டில் அக்கறை செலுத்துங்கள் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.
நோய்த் தொற்றின் தலைநகராகச் சென்னை மாறிக்கொண்டிருப்பதைக் கட்டுப்படுத்த இனியாவது செயல்படுங்கள். சென்னையில் அரசு மருத்துவமனைகள் படுக்கைகள் போதாமல் திணறுகின்றன. திருமண மண்டபங்களை, கல்விக் கூடங்களை மருத்துவமனைகளாக மாற்றுவோம் என அரசு அறிவித்தது என்ன ஆயிற்று?
நாட்டிலேயே கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி வரும் நிலையில், முதலமைச்சர் ஆற்றிய உரையில் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கோ, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்கோ உரிய உறுதியான திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறாதது வேதனைக்குரியது.
வெறுமனே, ஏதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முதலமைச்சர் முன்வர வேண்டும்!
சென்னையின் ஐந்து மண்டலத்தை மிகுந்த கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி - அப்பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்கி - ஓர் அரண் போல் தடுப்பு நடவடிக்கை எடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும்.
இனியேனும் தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக மாதம் ரூ.5000 வழங்க வேண்டும். இப்போது தேவை சொல் அல்ல; செயல்”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.