தமிழகம்

வியாபாரிகள் போராட்டம் நடத்தினால் வீதி வீதியாகச் சென்று காய்கறி விற்பனை: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிப்பு

அ.வேலுச்சாமி

வியாபாரிகள் போராட்டம் நடத்தினால் வீதி வீதியாகச் சென்று காய்கறி விற்பனை செய்யப்படும் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்காவிட்டால், மாநகரின் வேறு எந்த பகுதியிலும் காய்கறி விற்பனையில் ஈடுபடப் போவதில்லை என காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அவர்களுடன் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வியாபாரிகளின் இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு காய்கறி தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்ப்பது குறித்து திருச்சி மாவட்ட மனித வளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. செயலாளர் கு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் தலைவரும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான

கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது:

திருச்சி மாநகரில் வியாபாரிகளின் போராட்டத்தின் காரணமாக ஜூன் 8-ம் தேதி (நாளை) முதல் காய்கறி தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, எங்கள் சங்கத்தின் சார்பில் 20 சுமை ஆட்டோக்கள், 50 இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், இதுதவிர 500 பெண்கள் கூடையில் வைத்தும் திருச்சி மாநகரம் முழுவதும் வீதி, வீதியாகச் சென்று காய்கறி விற்பனை செய்ய உள்ளனர்.

அதேபோல மாநகரம் மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள காய்கறிக் கடை, மளிகைக் கடை, உணவகங்கள் நடத்துவோருக்கு காய்கறிகள் மொத்தமாக தேவைப்பட்டால், அவர்கள் 9843168034, 9786874457, 9597983600, 8870285356 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் கேட்கும் காய்கறிகளை, இருப்பிடத்துக்கே நேரில் சென்று டெலிவரி செய்யவும் திட்டமிட்டுள்ளோம். முதல்வர் பழனிசாமி ஆட்சியில் காய்கறிக்கு தட்டுப்பாடு என்ற நிலையே இருக்கக்கூடாது’ என்றார்.

SCROLL FOR NEXT