தமிழகம்

20 ஆயிரத்தை கடந்த சென்னை கரோனா பாதிப்பு: சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்க சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மேலும் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் இன்று 1,458 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,146 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 19,847 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது.

1,458 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 78.60 சதவீதத் தொற்று சென்னையில் (1,146) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 30,152-ல் சென்னையில் மட்டும் 20,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 69.62 சதவீதம் ஆகும்.

அதிலும் சென்னையின் குறிப்பிட்ட 5 மண்டலங்களில் தொற்று எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது. 1000 எண்ணிக்கையை கடந்த மண்டலங்களும் அதிகரித்து வருகிறது. சென்னையின் ஒரு ராயபுரம் மண்டலத்தின் மொத்த எண்ணிக்கை 3,717 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவில் பல மாநிலங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட அதிகம்.

சென்னையில் 20 ஆயிரத்தை கடந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் சரிபாதியாக 10 ஆயிரத்து 502 பேர் என்கிற அளவில் உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 251 பேரில் சென்னையில் மட்டுமே 197 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 78.48 சதவீதமாகும்.

இந்நிலையில் சென்னையில் கரோனா தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள், பின் மண்டலவாரியாக ஐஏஎஸ் ஐபிஎஸ் நியமனம், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் கரோனா சிறப்பு அதிகாரியாக நியமனம். ஐந்து அமைச்சர்கள் தலா 3 மண்டலங்களுக்கு நியமனம் என பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT