தமிழகம்

ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நாட்டில் இடஒதுக்கீடு அவசியமானது: டி.ராஜா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நாட்டில் இட ஒதுக்கீடு அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.

சென்னையில் நேற்று நடந்த இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் டி.ராஜா பேசியதாவது:

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். தங்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது அனை வருக்கும் இட ஒதுக்கீடு வழங்காத நிலையை கொண்டுவர வேண்டும் என அவர்கள் போராடுகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கருத்து கூறும்போது, ‘இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கூடாது’ என்கின்றனர். நம் நாட்டில் சில ஜாதியினர் கல்வி பெற முடியாமல், அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடியாமல் உள்ளனர். ஆகவே ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதை ஏற்க இயலாது. இப்படி கூறும் இந்துத்துவா அமைப்பினர், ஜாதியே கூடாது என சொல்ல ஏன் மறுக்கின்றனர்?

நாட்டில் செல்வ வளம், பொரு ளாதார வளம் எல்லம் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களால் உருவானது. அதில் அவர்களுக்கு பங்கு வழங்க வேண்டும் என்ற குரல் இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது ‘குஜராத் மாதிரி’ என்ற பிரச்சாரத்தை முன்வைத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. குஜராத்தில் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்களின் வளர்ச்சிக்காக சலுகைகளை அள்ளி வழங்கியதால் அங்குள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நலிவடைந்தன. அந்தத் தொழில்களை செய்து வந்த பெரும்பான்மையான பட்டேல்கள் பாதிப்படைந்தனர். இத னால்தான், இப்போது அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகின்றனர். ‘குஜராத் மாதிரி’ ஏற்படுத்திய விளைவுதான் இது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச வெல்த் மேனேஜ்மென்ட் அறிக்கையில், உலகில் அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் 1.98 லட்சம் பெரும் கோடீஸ்வரர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்து அதில் ஒருவர் கூட ஒடுக்கப்பட்ட இனத்தவர் இல்லை. இட ஒதுக்கீட்டை காப் பாற்ற நாம் அனைவரும் போராட வேண்டும்.

இவ்வாறு டி.ராஜா பேசினார்.

கருத்தரங்கில் மார்க்சிய, பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவர் வே.ஆனைமுத்து, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவ சகாயம், தமிழர் விடுதலை முன்னணி துணைத் தலைவர் அய்யநாதன், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் வினோத், பேராசிரியர் நாகநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.

SCROLL FOR NEXT