தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள மண்டலங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இந்த 4 மாவட்டங்களின் முதல் காவல் சோதனைச்சாவடியாக உள்ள கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில் அனைத்து வாகனங்களுக்கு பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
அதே போல், அங்குள்ள தெர்மல் ஸ்கேனர் மூலம் வாகனங்களில் வருவோருக்கும் காய்ச்சல் உள்ளதா என்றும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது அரசு அளித்துள்ள தளர்வில் 3 அல்லது 4 மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மண்டலம் விட்டு மண்டலம் செல்லும் மக்கள், சுமார் 10 கி.மீ. வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம், ஊட்டி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஒவ்வொரு மண்டலத்தை கடந்து இன்று காலை சாத்தூர் வந்தனர். அங்கிருந்து நாகர்கோவில், கயத்தாறு, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாததால், சாத்தூரில் இருந்து உப்பத்தூர் வரை ஆட்டோவில் வந்து, அங்கிருந்து தங்களது உடைமைகளுடன் சுமார் 10 கி.மீ. தூரம் வரை நடந்து கோவில்பட்டி பேருந்து நிலையத்தக்கு வந்தனர். அங்கிருந்து தங்களது ஊர்களுக்கு பேருந்துகளில் சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு வந்தோம். அதன் பின்னர் ஊருக்கு வர முடியாத நிலையில் தற்போது மண்டலங்களுக்குள் பேருந்து சேவை தொடங்கியதால் ஊருக்கு புறப்பட்டோம். சேலம் தனி மண்டலமாக உள்ளது. அங்கிருந்து மண்டலங்கள் பிரிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையே நடந்தும், பேருந்துகளிலும் மதுரைக்கு வந்து சேர்ந்தோம். அதுவும் இரவு பேருந்து இயக்கப்படாததால் மதுரையிலேயே தங்கினோம். பின்னர் அங்கிருந்து காலை பேருந்தில் சாத்தூர் வந்தோம். பின்னர் உப்பத்தூர் வரை ஆட்டோவில் வந்து, நடந்தே கோவில்பட்டி பேருந்து நிலையம் வந்து, நாகர்கோவிலுக்குச் செல்கிறோம். அரசு மண்டலங்களை குறைத்துப் பேருந்து இயக்கத்தை அதிகரிக்க வேண்டும், என்றனர்.
இதே போல், கோவில்பட்டியைச் சேர்ந்த வணிகர்கள் பெரும்பாலும் மதுரையில் இருந்து தான் மொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை மதுரை மண்டலத்துடன் இணைக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர்.