பச்சிளங் குழந்தைக்கு ஏற்பட்ட அரிதான ரத்த சோகை நோயை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் துறைத்தலைவர் பூமா கூறியதாவது:
"கோவை சூலூரை அடுத்த காடம்பாடியைச் சேர்ந்த பவித்ரா-சதீஷ்குமார் தம்பதிக்கு, தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ரத்த சோகை மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங் குழந்தைகள் சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். குழந்தையின் ரத்தப் பிரிவு, தாயின் ரத்தப் பிரிவிலிருந்து வேறுபட்டிருந்தால் அல்லது நெகட்டிவ் பிரிவுகள் இருந்தால் மஞ்சள் காமாலை வரும். அந்த மஞ்சள் காமலையின் அறிகுறியான 'பிலுருபின்' அளவு குழந்தைக்கு 30 யூனிட்டாக இருந்தது. அதேபோல, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 4 ஆக இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சை செய்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பின்னர், குழந்தையைப் பரிசோதித்ததில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள கூடிய அரிய வகை ரத்த சோகை நோய் ('இம்யூன் ஹீமோலைடிக் அனீமியா') இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், ரத்த அணுக்கள் தன்னிச்சையாக அழிந்துவந்தன. புதிதாக ரத்தம் உருவாவது தடைப்பட்டது. நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்காக 'இம்யுனோ குளாபுளின்' மருந்தை 3 நாட்கள் செலுத்தினோம். அதன் பின்னர் ஹீமோகுளோபின் அளவு 13 ஆக உயர்ந்தது.
17 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தாயும், சேயும் நலமாக வீடு திரும்பினர். வெளியே இந்த சிகிச்சையை மேற்கொண்டால் லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், இங்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அரிதான இந்த சிகிச்சையை மேற்கொள்ள கோவை அரசு மருத்துவமனையின் டீன் காளிதாஜ், மருத்துவர்கள் செந்தில்குமார், சத்தியன், சசிகுமார் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்".
இவ்வாறு பூமா கூறினார்.