கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சமூக இடைவெளியுடன் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
இந்நிலையில் வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வருவதால் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து காய்கறி சந்தை, மீன் சந்தை போன்றவற்றில் உள்ள வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
குமரி - கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சந்தையில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் போன்றவற்றில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு இன்று சுகாதாரத்துறையினர் சளி, மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதைப்போல் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் செயல்படும் காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகளின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும், குமரி மாவட்டத்தில் திங்கள்நகர், குளச்சல், கருங்கல், தக்கலை, குலசேகரம், ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சந்தைகளிலும் கரோனா பரிசோதனை அடுத்த கட்டமாக நடத்தப்பட உள்ளது.