சிவகங்கையில் புதிதாக அமைக்கப்படும் கரோனா மருத்துவமனையில் ஒரே நாளில் 13 பாம்புகள் பிடிப்பட்டன. மேலும் ஏராளமான பாம்புகளை பிடிக்க முடியவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மற்ற நோய்களுக்காக சிகிச்சைக்கு வருவோருக்கும், கரோனா வார்டை தவிர்த்து மற்ற பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கும் கரோனா பரவ வாய்ப்புள்ளது.
மேலும் கரோனா தொற்று தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கரோனா வார்டுகளை வேறு இடங்களுக்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை பழைய அரசு மருத்துவமனைக்கு கரோனா வார்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த கட்டிடத்தில் ஜூன் 8-ம் தேதியில் இருந்து 55 படுக்கைகளுடன் கரோனா வார்டு செயல்படப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இக்கட்டிடம் மருத்துவக் கல்லூரி தொடங்கியதில் இருந்து 8 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. இதனால் புதர் மண்டியும், கட்டிடங்கள் சேதமடைந்தும் காணப்படுகின்றன. அவற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 3 நல்ல பாம்பு, 3 விரியன் பாம்பு என 13 பாம்புகள் பிடிப்பட்டன. புதர்களாகவும், கட்டிடங்கள் பாழடைந்து இருப்பதாலும் ஏராளமான பாம்புகளை பிடிக்க முடியவில்லை. இதனால் அங்கு கரோனா வார்டுகளை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து சீரமைத்தால் மட்டுமே அந்தக் கட்டிடங்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.