இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை; தமிழக - மத்திய அரசுகளின் தீவிரம் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; முத்தரசன்

செய்திப்பிரிவு

கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூன் 6) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை - சேலம் எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என விவசாயிகள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளில் நில எடுப்புப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என 2019 ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்திய போதிலும், அதனை அலட்சியப்படுத்தி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இதன் தொடர்ச்சியாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை - சேலம் எட்டு வழி விரைவுச் சாலை தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என அண்மையில் முறையிட்டுள்ளது. இதனை ஆதரித்து தமிழக அமைச்சர்கள் பேசி வருகின்றனர்.

சென்னை - சேலம் எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தால் சுமார் 7 ஆயிரத்து 300 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகிறது. இதனை நம்பி வாழும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிதாபகரமான நிலை ஏற்படும், அடர்ந்த வனப்பகுதியில் 11 இடங்களில் எட்டு வழிச் சாலை அமைவதால் சூழலியலில் கடுமையான தாக்கம் ஏற்படும், எண்ணற்ற நீர்நிலைகள் தூர்த்து சேதப்படுத்தப்படும் என்பதை கருத்தில் கொள்ளாத மத்திய அரசும், தமிழக அரசும் எட்டு வழி விரைவுச் சாலை அமைப்பதில் தீவிரம் காட்டுவதன் நோக்கம் ஆழமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், சூழலியல் மாற்றங்களை உருவாக்கும், நீர்நிலைகள் மற்றும் வனப்பகுதிகளை அழிக்கும் சென்னை - சேலம் எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT