மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 மாத மின் கட்டணங்களை ரத்து செய்வதற்கு தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இரா.முத்தரசன் இன்று (ஜூன் 6) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக எடுத்த கணக்கீட்டின்படி மார்ச் முதல் மே முடிய 3 மாத மின் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திக்கப்படுகிறது. இதில் மின் நுகர்வு கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மின் கணக்கெடுப்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. இது ஒரு முன் யோசனை இல்லாத முடிவாகும்.
மின் நுகர்வு கணக்கெடுப்புப் பணி வீடு வீடாக அல்லது தொழிலகங்களுக்கு ஒரு பணியாளர் மட்டுமே தனித்துச் செல்வது வழக்கமாகும். இதன்படி கரோனா தடுப்பு முகக்கவசமும், கையுறையும் அணிந்து, கைதுடைப்பான் பயன்படுத்தி கணக்கெடுப்புப் பணியைத் தொடர்ந்து செய்திருக்க முடியும். கணக்கீட்டின்படி ஆன்லைனில் மின் நுகர்வு கணக்கு மின் இணைப்பாளர் பார்வைக்குச் சென்றிருக்கும். பணம் செலுத்தும் வாய்ப்புள்ளோர் காலத்தில் மின் கட்டணம் செலுத்தி இருப்பார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக கணக்கெடுப்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. யாம் அறியோம் பாரபரமே!
இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொழிலகங்கள், வணிகம் உள்ளிட்ட வணிகம் சார்ந்த சேவை நிறுவனங்களின் மின் நுகர்வு முழு அளவில் இருந்திருக்கும்.
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூன் முதல் தேதி வரை நாடு முடக்கம் அமலாக்கத்தில் இருந்த காலத்தில் மின் நுகர்வு அநேகமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், பழைய நுகர்வு கணக்கெடுப்பின்படி மின் கட்டணம் செலுத்தக் கூறுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்க நியாயம் ஆகாது.
இதேபோல், வீட்டு உபயோகத்திற்கான மின் நுகர்வு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த காலத்தில் அதிகரித்திருக்கும் என்பது ஏற்கத்தக்கதுதான். ஆனால், கரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு காரணமாக வேலையும், வருமானமும் இழந்த நிலையில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே பெரும்பாடு படும் அமைப்புசாரா, உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மூன்று மாத மின் கட்டணத்தை எப்படிச் செலுத்த முடியும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.
ஒரு கடுமையான, புதுவகை கரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்புக்காக அரசு மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலகங்களுக்கும், முடங்கிக் கிடந்த மக்களுக்கும் மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 4 மாத மின் கட்டணங்களை ரத்து செய்வதற்கு தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்".
இவ்வாறு இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.