சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பாக வானதி சீனிவாசனிடம் மனுக்களை அளித்த கோவை, சிறு, குறு தொழில்முனைவோர் கூட்டமைப்பினர். 
தமிழகம்

சிறு, குறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசு கைகொடுக்கும்: வானதி சீனிவாசன் உறுதி

ஆர்.கிருஷ்ணகுமார்

சிறு, குறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசு கைகொடுக்கும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள குறு, சிறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் காஸ்மாபேன் சங்க அலுவலகத்தில் இன்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில், பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அரசு அறிவித்து உள்ள கடன் திட்டங்களைப் பெறுவதில் தொழில்முனைவோருக்கு உள்ள பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

"மத்திய அரசு அறிவித்துள்ள கடன் திட்டங்களை வங்கிகள் முறையாகச் செயல்படுத்த வேண்டும். கடும் நெருக்கடியில் தவிக்கும் சிறு, குறு தொழில்முனைவோருக்குத் தேவையான கடனுதவிகளை உடனடியாக வழங்க வேண்டும். வெட்கிரைண்டர் தொழில்முனைவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்துதர வேண்டும். ஜிஎஸ்டி அபராதத் தொகையைத் திருப்பித்தர வேண்டும். ஜாப் ஆர்டர் முறையில் தயாரிக்கும் உதிரி பாகங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜேம்ஸ், சுருளிவேல், சிவசண்முககுமார் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக உறுதியளித்த வானதி சீனிவாசன், சிறு, குறு தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT