தமிழக ஜவுளித் துறையை சுற்றுச்சூழல் சார்ந்த ஜவுளிப் பொருட்கள் தயாரிப்பு மையமாக மாற்ற இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எஃப்) புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறும்போது, "சர்வதேச அளவிலான ஜவுளி ஏற்றுமதியில் கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். கரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு, ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் என்று நம்புகிறோம்.
இதையொட்டி, தமிழக ஜவுளிகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். தற்போது, சுற்றுச்சூழல் சார்ந்த ஜவுளிப் பொருட்கள் தயாரிப்பு மையமாக தமிழகத்தை மாற்றும் வகையில் ஐ.டி.எஃப். சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் 'India for SURE’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத ஜவுளிகள், இந்திய ஜவுளித் துறைக்கு உலக அளவில் நன்மதிப்பையும், நம்பிக்கை, முக்கியத்துவத்தையும் உருவாக்கும்.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக, சுற்றுச்சூழல் தயாரிப்பு இலக்குகளை அடையும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம். இதற்கான தகவல்கள் சேகரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்த தயாரிப்பு முறைகளில் கவனம் செலுத்தப்படும்" என்றார்.