தமிழகம்

ரூ.50 ஆயிரம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்; கொடுக்கவில்லை என்று சொன்னால் எப்படி?- கூட்டுறவுத்துறை அமைச்சர் சொல்லும் விளக்கம் 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘‘கூட்டுறவு வங்கிகளில் சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் தொகை கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம், ’’ என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ‘‘குடும்ப அட்டையைக் காட்டினாலே போதும் சிறு, குறு வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் தொகை கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்படும், ’’ என்று தெரிவித்தார்.

இவரது அறிவிப்பு, ‘கரோனா’வால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் சாலையோர நடைபாதைகளில் சிறு, குறு வியாபாரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், அதேநேரத்தில் அவரது இந்த தகவல் ‘குடும்ப அட்டை இருந்தாலே போதும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும், ’ என்று சமூக வலைதளங்கில் வைரலானது.

அதனால், சிறு, குறு வணிகர்கள் மட்டுமில்லாது பொதுமக்களும் கூட்டுறவு வங்கிகளில் குடும்ப அட்டைகளை எடுத்து சென்று அமைச்சர் அறிவித்த ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு வருகின்றனர். ஆனால், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், இல்லை என்று மறுக்காமலும், இருக்கிறது என்று கடன் கொடுக்காமலும் கடன் கேட்டு சென்றவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அதனால், அமைச்சரின் ரூ.50 ஆயிரம் தொகை அறிவிப்பு நிகழ்வு சமூக வலைதளங்களில் இருக்கா? இல்லையா? என்று தற்போது மீம்ஸ் வடிவில் வலம் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் டிடிவி.தினகரன் தனது டூவிட்டர் பக்கத்தில், ‘‘குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.

அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூவிடம் கேட்டபோது, ‘‘பிப்ரவரியில் இருந்து கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் தொகை கொடுத்துகிட்டுதான் இருக்கிறோம். கொடுக்கலனு சொன்னா எப்படி. சாலையோர நடைபாதைகளில் கடைகள் வைத்திருக்கும் சிறு, குறு வியாபாரிகள் 2015ம் ஆண்டு முதலே கூட்டுறவு வங்களில் கடன் வழங்கி வருகிறோம்.

ஆரம்பத்தில் ரூ.5 ஆயிரத்தில் ஆரம்பித்த இந்த கடன் தொகை, ரூ.25 ஆயிரமாக உயர்ந்து தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வருகிறோம். இந்த கடன் தொகை பெறுவதற்கு குடும்ப அட்டையும், உங்களை எனக்குத் தெரியும் என்று உங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர் சொன்னாலே போதும். அதிகாரிகள் கடன் வழங்கிவிடுவார்கள்.

இதுவரை இந்த கடன்தொகை திட்டத்தில் சிறு, குறு வியாபாரிகளுக்கு 1952 கோடி கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கி உள்ளோம். சும்மா குற்றம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு நான் என்ன சொல்வது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT