கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது சில இடங்களில் கண்துடைப்பாக சாலை சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக மேற்கு மாவட்டம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகள், தார், ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதிகரிக்கும் விபத்துகள்
மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை செல்லும் சாலை, திருவட்டாறு, குலசேகரம் சாலை, குளச்சல் சாலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, ஆறுகாணி, மற்றும் மலைகிராமங்களுக்கு செல்லும் சாலை, கருங்கல், தக்கலை, குமாரபுரம், திங்கள்நகர், இரணியல் உட்பட பல இடங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் பல சாலைகளில் தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சாலையில் காணப்படும் ஆபத்தான பள்ளங்களால், வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பள்ளி, அலுவலகங்களுக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலைகிராமங்களில் உள்ள 90 சதவீத சாலைகள் பயணம் செய்ய முடியாத நிலையில் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதிகளில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.
திங்கள்நகரை சேர்ந்த ராஜேந்திரன் கூறும்போது, “தினமும் எனது மகனை பைக்கில் அழைத்து சென்று நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் விட்ட பின்னர் வேலைக்குச் சென்று வருகிறேன். திங்கள்நகர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து இரணியல், கண்டன்விளை வழித்தடத்தில் வில்லுக்குறி சந்திப்பு வரை சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஆபத்தான பள்ளங்களில் கூரிய கற்கள் அதிக அளவில் இருப்பதால் அதில் சிக்கி வாகனங்கள் பழுதடைகின்றன; அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தினமும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இவ்வழியாகவே சென்று வருகின்றனர். ஆனால் இதுவரை சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
மக்கள் போராட்டம்
சாலைகளை செப்பனிடக்கோரி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வில்லுக்குறி, கண்டன்விளை வழித்தட சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் மறியல் செய்ய முயன்றனர்.
கண்துடைப்பு பணி
இந்நிலையில், இரணியல் சாலை உட்பட பல இடங்களில் உள்ள சாலைகளில் காணப்படும் ஆபத்தான பள்ளத்தை மண்போட்டு சமப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முறையாக சீரமைக்காமல் வெறும் கருங்கற்களை கொண்டு பள்ளத்தை நிரப்பி, அதில் மண் போட்டு மூடுகின்றனர். இது ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்காது என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாலைகளை முறையாக சீரமைக்க மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகங் கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.