தமிழகம்

மீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மற்ற நீதிபதிகள் நீதிமன்றம் வராமல் தங்கள் வீடுகளில் இருந்தே காணொலியில் வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற அறைகளுக்கு வந்து வழக்குகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டு, அதன்படி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வழக்குகளை விசாரித்து வந்த 3 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மீண்டும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்களின் அறைகளில் உள்ள வழக்கு ஆவணங்கள், லேப்டாப், வங்கி ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல இரு நாட்களில் மட்டுமே அனுமதி.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் 11 மணி முதல் 12 மணி வரையிலும் மற்றும் 2 மணி முதல் 3 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அறைக்கு செல்லும் வழக்கறிஞர்கள் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு உடனடியாக வெளியேற வேண்டும் - வெளியில் காத்திருப்பவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல heritagegroup2017@gmail.com மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடுதல், கூட்டம் சேர்த்தலை தவிர்க்க வேண்டும் - முகக்கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும்”

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT