விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் காசநோய், ஆயுர்வேத, சித்த மருத்துவமனைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவனை கரோனா சிகிச்சைப்பிரிவாக கடந்த ஏப்ரல் மாதம் மாற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி, கரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்க கரோனா அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வளாகத்தில் இயங்கி வந்த காசநோய், ஆயுர்வேத, சித்த மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், ஆயுர்வேத, சித்த மருத்துவ முறையில் நீரிழிவு, ரத்த கொதிப்பு, தோல் நோய் உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்வது சிக்கலுக்குள்ளானது.
மேலும், காசநோய் கண்டறிதல், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள் பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இந்த நோயாளிகள் அனைவரும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், விழுப்புரம் நகரிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதில் சிரமம் உள்ளது என்றும், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் செல்வதில் சிரமம் உள்ளது என பொதுமக்கள் நடைமுறை சிக்கல்களை தெரிவித்தனர்.
வேறு அரசு கட்டிடத்தில் இந்த மருத்துவமனையை இயக்கலாமே என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாலாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நகரில் வேறு எங்கும் இடம் கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கி கொடுத்தால் உடனே நாங்கள் மருத்துவம் செய்ய தயாராக உள்ளோம்" என்றார்.
இது குறித்து மயிலம் எம்எல்ஏவான மாசிலாமணி ஆட்சியர், அண்ணாதுரையிடம் காசநோய், ஆயுர்வேத, சித்த மருத்துவமனைகளை இயக்க வேறு இடம் ஒதுக்கித்தருமாறு கோரிக்கை வைத்தார்.
ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இம்மருத்துவமனைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தார்.