தமிழகம்

மதுவுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் ஜாமீனில் விடுதலை

செய்திப்பிரிவு

பூரண மதுவிலக்கு கோரி நடந்த போராட்டத்தில் சென்னை சேத்துப்பட்டில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த 9 கல்லூரி மாணவ- மாணவியர் உட்பட 13 பேர் இன்று ஜாமீனில் விடுதலையானார்கள். 38 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அவர்களுக்கு, புழல் சிறை வாசலில் பறை இசை முழங்க சக மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணியினர் கடந்த மாதம் 3-ம் தேதி, பச்சையப்பன் கல்லூரி அருகே சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின்போது ஒரு டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் மிகக் கடுமையாக தடியடியும் நடத்தினர்.

டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான அன்பு, பூபாலன் ஆகிய இரு மாணவர்கள் மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த மாதம் 9-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

நிபந்தனையற்ற ஜாமீன்

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான செல்வகுமார், தினேஷ், நினைவேந்தன், பள்ளி மாணவர் மாரிமுத்து, ஐ.டி.ஐ. மாணவர் மணி மற்றும் ராணி மேரி கல்லூரி மாணவிகள் நிவேதிதா, வாணிஸ்ரீ, சட்டக்கல்லூரி மாணவி கனிமொழி மற்றும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி நிர்வாகிகளான திருமலை, ஆசாத், சாரதி, ரூபாவதி உள்ளிட்ட 13 பேர் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், சிறையில் இருந்த 13 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இன்று மாணவ- மாணவிகள் 9 பேருக்கு நிபந்தனையற்ற ஜாமீனும், மாணவரல்லாத புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி நிர்வாகிகள் 4 பேருக்கு, இரு வாரங்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீனையும் வழங்கியது.

போராட்டம் தொடரும்

இதையடுத்து, 9 கல்லூரி மாணவ- மாணவியர் உட்பட 13 பேர் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 38 நாட்களுக்குப் பிறகு சிறையியில் இருந்து வெளியே வந்த அவர்களுக்கு, புழல் சிறை வாசலில் பறை இசை முழங்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி அமைப்பினர் என 200-க்கும் மேற்பட்டோர், புழல் சிறை வாசலில் திரண்டு, பறை இசை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் உள்ளிட்ட 13 பேரும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT