தமிழகம்

வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கு வாய்ப்பு குறைவு- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வெட்டுக் கிளிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, குமரி ஆகிய மாவட்டங்களில் வெட்டுக் கிளிகள் வாழை, ரப்பர் பயி்ர்களை நாசம் செய்துள்ளன. எனவே தமிழகத்தில் வெட்டுக் கிளிகள் எச்சரிக்கை மையம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.

விவசாய உற்பத்தி துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான், ஜோத்பூரில் உள்ள வெட்டுக் கிளிகள் எச்சரிக்கை மையத்தின் கருத்துப்படி, பாலைவன வெட்டுக் கிளிகள் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் பரவி வருகின்றன. ஜூலை மாதம் வரை வெட்டுக் கிளிகளின் பரவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை புழு நிலையிலேயே அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகத்துக்கு பாலைவன வெட்டுக் கிளிகள் வருவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

கிருஷ்ணகிரி, குமரி மாவட்டங்களில் பயிர்களை நாசம் செய்தது பாலைவன வெட்டுக் கிளிகள் அல்ல. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வெட்டுக் கிளிகள் தொடர்பான கண்காணிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. வெட்டுக் கிளிகளை ஒழிக்கத் தேவையான மருந்துகளு டன் தயார்நிலையில் அரசு உள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

இவற்றைப் பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT