தமிழகம்

உயர் அதிகாரிகளின் நெருக்குதல் காரணமா? - பெண் டிஎஸ்பி தற்கொலை வழக்கின் பின்னணி விவரம்

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா (27) தற்கொலை வழக்கில் பல பின்னணி தகவல்கள் வெளி யாகியுள்ளன. தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக ஆர். விஷ்ணுபிரியா பணிபுரிந்து வந்தார். திருச்செங்கோடு - ஈரோடு சாலை அருகே காவல் குடியிருப்பு வளாகத்தில் அமைந் துள்ள காவல் துணைக் கண் காணிப்பாளர் குடியிருப்பில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய அவர், படுக்கை அறையினுள், தூக் கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக காவல்துறை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி வித்யா குல்கர்னி உத்தரவின்படி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் மேற்பார்வையில் திருச்செங்கோடு காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்துள் ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக ராசிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு சம்பந்தமாக காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிவைத்த கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக உயரதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால், அவர் தற்கொலை செய்துகொண்டதாக, காவல்துறை வட்டாரத்தில் புகார் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனினும், இரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரு துணைக் கண்காணிப்பாளர், 7 காவல் ஆய் வாளர்கள் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந் தில்குமார் உத்தரவுப்படி அவ ருக்கு உதவியாக செயல்பட்டு வந்துள்ளனர்.

அதன் காரணமாக கோகுல் ராஜ் கொலை வழக்கில் எவ்வித நெருக்குதலும் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு ஏற்பட வாய்ப் பில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. அவர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய 10 பக்கம் கொண்ட கடிதமும் கைப் பற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ் கலந்த ஆங்கிலம் என கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மாவட்ட காவல் துறையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை’ என்றனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ், கடந்த ஜூன் மாதம் பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். காதல் விவகாரம் தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டார் என காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, அந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் 8 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள யுவராஜ் என்பவர் காவல் துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT