மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு, அனைத்து மாநில வனத் துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல், வனத் துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், வனத் துறை தலைவர் பி.துரைராசு, சுற்றுச் சூழல் துறை இயக்குநர் ஜெயந்தி,தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் ஏ.வி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் சென்னையில் இருந்தபடி பங்கேற்றனர்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து நகர்ப்புற வனங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள வன ஆக்கிரமிப்புகளை அகற்றி பசுமை பகுதிகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, நகர்ப்புற வன மேம்பாடு குறித்த கையேட்டை அவர் வெளியிட்டார்.