வங்கக் கடலில் வரும் 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மத்திய மேற்கு வங்கக் கடலின் கிழக்குப் பகுதியில் வரும் 8-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். புயலாக மாற வாய்ப்பில்லை. இது ஆந்திரா நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
வெப்பச் சலனத்தால் மழை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா வில் 3 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, நாகர் கோவில், கோவை மாவட்டம் வால்பாறை, சோலையார் ஆகிய பகுதிகளில் தலா 2 செமீ, திருப்பத்தூர், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சி புரம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதி யில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு நா.புவியரசன் கூறினார்.