கரோனா ஊரடங்கு காலத்தில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினர் 8 பேருக்கு, திருச்சி கரோனா முகாமில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சாவூதி ஷோயப் அபுபக்கர் உள்ளிட்ட 8 பேர் சுற்றுலா விசாவில் டெல்லி வந்தனர்.
இவர்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை அண்ணா நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆஸ்டின்பட்டி போலீஸார் தொற்றுநோய் பரவல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்களுக்கு உதவிய விளாச்சேரியைச் சேர்ந்த ரியாஸ்தீன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 9 பேரும் ஜாமீன் கோரி மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். இவர்களின் மனு ஏற்கெனவே பல முறை தள்ளுபடியான நிலையில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை நீதிபதி நசீமா பானு விசாரித்து அனைவருக்கும் ஜாமீன் வழங்கினார். தாய்லாந்து நாட்டினர் திருச்சியிலுள்ள கரோனா தடுப்பு முகாமில் தங்கியிருக்க வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.