தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிவகளை, பரம்பில் 4 பகுதிகளாக அளவீடு செய்யப்பட்டு குழிதோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக தொல்லியல் துறையின் சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இரண்டு முதுமக்கள் தாழியின் விளிம்புப் பகுதிகள் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டன. இதனை தொல்லியல் துறையினர் எவ்வித சேதமும் இன்றி வெளியில் எடுக்கும் பணியைத் தற்போது தொடங்கியுள்ளனர்.
சிவகளையில் தொடர்ந்து நடைபெறவுள்ள அகழாய்வுப் பணிகளில் கிடைக்கும் பொருள்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் வெளிப்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.