தூத்துக்குடியில் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைப் போக்கவும், தனிமை நாட்களைப் பயனுள்ளதாக கழிக்கவும் அவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறது தூத்துக்குடி மாநகராட்சி.
கரோனா ஊரடங்கு காலத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருவோர் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் அவர்கள் ஒரிரு நாட்கள் மட்டுமே தனிமை முகாமில் தங்க வேண்டும்.
அதே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் 7 நாட்கள் தனிமை முகாமில் தங்கி தான் ஆக வேண்டும். தனிமை முகாமில் தனி அறைகளில் தனியாக சில நாட்கள் இருப்பதால் பலருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனை போக்கவும், தனிமை நாட்களை பயனுள்ளதாகக் கழிக்கவும் அவர்களுக்கு பல்வேறு புத்தகங்களை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறது தூத்துக்குடி மாநகராட்சி.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசினர் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரி விடுதிகளில் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் சராசரியாக தினமும் 150 முதல் 200 பேர் தங்கியுள்ளனர்.
தற்போது இலங்கையில் இருந்து வந்த 31 பேர், அபுதாபியில் இருந்து வந்த 7 பேர் தங்கியுள்ளனர். தனிமையில் இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மன உளச்சலை போக்கவும், தனிமை நேரத்தைப் பயனுள்ளதாக கழிக்கவும் புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இதற்காக காலச்சுவடு பதிப்பகத்திடம் இருந்து சிறுகதை, நாவல்போன்ற 100 புத்தகங்களை வாங்கியுள்ளோம். இந்தப் புத்தகங்களை தனிமை முகாமில் இருப்பவர்களிடம் வழங்குகிறோம். பலர் ஆர்வமுடன் புத்தகங்களை படிக்கின்றனர். இதன் மூலம் தனிமை எண்ணத்தை கைவிட்டு சந்தோஷமாக இருக்கின்றனர் என்றார் அவர்.