காரைக்குடி அருகே தனியார் சூரிய மின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அப்பகுதியை கார்த்தி சிதம்பரம் எம்.பி நேரில் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வேப்பங்குளம் கிராமத்தில் 350 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. ஏழு கண்மாய்கள் இருந்தும் தொடர் வறட்சியால் விவசாய நிலங்கள் தரிசாகக் கிடந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து தங்களது சொந்த நிதி மூலம் கண்மாய்கள், வரத்து கால்வாய்களைத் தூர்வாரினர்.
இதனால் கடந்த ஆண்டு பெய்த மழையில் கண்மாய்கள் முழுவதும் நிரம்பியது. இதையடுத்து விவசாயிகள் இருபோக விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனால் அரசு அப்பகுதி விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் வேப்பங்கும் பகுதியில் உள்ள 270 ஏக்கரில் தனியார் நிறுவனம் சார்பில் 54.6 மெகா வாட் சூரிய மின் உற்பத்தி திட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பகுதியில் இருந்து தான் மழைநீர் கண்மாய்க்குச் செல்கிறது. இங்கு அமையவுள்ள சூரிய மின் திட்டத்தால் வரத்துக்கால்வாய் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூரிய மின் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி அப்பகுதியை நேரில் பார்வையிட்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தொழில் தொடங்க வருவோரை வரவேற்கிறேன்.
அதேசமயத்தில் தொழில் தொடங்கும் இடங்களில் வசிக்கும் மக்களின் அச்சத்தையும் களைந்த பிறகே திட்டங்களை செயல்படுத்த வேண்டும், என்று தெரிவித்தார்.