ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.14.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தொழில்கள், வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில், கரோனா ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறவும் ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் குழுவினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்துக்கு ரூ.300 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டத்தின்படி ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ரூ.14 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 329 பேர் பயனடைவார்கள். 1,656 பேருக்கு ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.8 கோடியே 28 லட்சம் நீண்ட கால தனி நபர் தொழில் கடனாக வழங்கப்படும். மீதமுள்ள நிதியில் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், படித்த இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் பயன்பெறுவார்கள்.
இந்தத் திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இதில், மாவட்ட திட்ட செயல் அலுவலர் திருமாறன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 207 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டம் தொடர்பாக 'தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகம், எண் 14, அம்பாலால் கிரீன் சிட்டி, பழைய பைபாஸ் சாலை, வேலூர்-4' என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 4,121 பேர் பயன்பெறும் வகையில் ரூ.5 கோடியே 56 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.