மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சாரச் சீர்திருத்த சட்ட வரைவு 2020 மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று தமிழகம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
144 தடை உத்தரவுக்கு மதிப்பளித்து விவசாயிகள் தங்கள் வாழிடங்களில் உள்ள வீடுகள், வயல்கள், பம்பு செட்களில் அமைதி வழியில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி நியூ பைபாஸ் சாலை காவிரி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அவரது கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீடுகள் அல்லது விளைநிலங்கள் மற்றும் சங்க அலுவலகங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மாலை ஐந்து மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு இலவச மின்சாரத்தைத் தொடர வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை அழிக்கும் நோக்கோடு சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுத்தப்படும் மேட்டூர் அணை - சரபங்கா உபரி நீர்த் திட்டத்தைக் கைவிடக் கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வீடுகள், விளைநிலங்களில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.