சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் பெரிய கொட்டகுடி ஊராட்சியில் உள்ள 8 கிராமங்களில் 3,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், பெரிய கொட்டகுடி காய்கறி தோட்டத்தில் கீரை பறிக்கும் தொழிலாளர்கள். கரோனா ஊரடங்கால் கிராம மக்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கிய ஊராட்சித் தலைவர் தனபால், ஆண்டு முழுவதும் மலிவு விலையில் காய்கறிகள் வழங்க முடிவெடுத்தார்.
இதையடுத்து புதர் மண்டிக் கிடந்த 2.5 ஏக்கர் தரிசு நிலத்தைச் சீரமைத்துத் தோட்டம் அமைத்தார். இதில் கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, பூசணி,பாகற்காய், புடலங்காய், நிலக்கடலை, கீரை போன்றவற்றை சாகுபடி செய்துள்ளார். மேலும் சப்போட்டா, மா, பலா உள்ளிட்ட பழவகை மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். இப்பணிகளில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர் களை ஈடுபடுத்தி வருகிறார். தற்போது விளைந்துள்ள கீரைகளை கிராமத்தினருக்கு இலவசமாக வழங்கி வருகிறார். ஊராட்சித் தலைவரின் இந்த முயற்சியை கிராம மக்கள் பாராட்டுகின்றனர்.
இது குறித்து ஊராட்சித் தலைவர் தனபால் கூறுகையில்,
ஊராட்சித் தலைவர் தனபால் ஊரடங்கால் வேலையின்றி சிரமப்பட்ட மக்களுக்கு முதலில் காய்கறிகளை விலைக்கு வாங்கி வழங்கினோம். அதன்பிறகு நாமே உற்பத்தி செய்தால் என்ன? என முடிவு செய்து காய்கறிகளுடன் பழமரக் கன்றுகளையும் நடவு செய்கிறோம்.
காய்கறிகள் 40 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இதன்மூலம் ஊராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு, மக்களுக்கு மலிவுவிலையில் காய்கறிகள் கிடைக்கும். ஊரடங்கு முடியும் வரை காய்கறிகளை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம் என்றுகூறினார்.