ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக் கான ஒதுக்கீட்டை முழுமையாக ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு விரைவாக பயிர்க் கடன், வேளாண் இடு பொருட்கள் வழங்குவது தொடர் பாக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
நிகழ் குறுவை சாகுபடிக்குத் தேவையான யூரியா, டிஏபி, எம்ஓபி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் இருப்பில் உள்ளன.
டெல்டா விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்காக நிகழாண்டு ரூ.2,562 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும்போது, விவசாயிகள் வாங்கிய கடன்களுக்காக பிடித்தம் செய்வதில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2011 முதல் 2020, மே வரை மாநிலத்தில் 94,83,206 பேருக்கு வட்டியில்லா பயிர்க் கடனாக ரூ.51,306 கோடி வழங்கப் பட்டுள்ளது. குறிப்பாக, முதல்வர் கே.பழனிசாமி ஆட்சியில் 2017, பிப்ரவரி முதல் 2020 மே வரையிலான காலத்தில் மட்டும் 37,57,433 பேருக்கு வட்டியில்லா பயிர்க் கடனாக ரூ.24,592.34 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் ரூ.1,000 கோடி கூடுதலாக பயிர்க் கடன் வழங் கப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சி யில் ரூ.9,163 கோடி மட்டுமே பயிர்க் கடன் வழங்கப்பட்டிருந்தது.
இதேபோல, கந்து வட்டியால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் இதுவரை சிறு வணிகக் கடனாக ரூ.1,952 கோடிக்கு மேல் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை ரேஷன் கடைகளில் இருந்து சிறிது சிறிதாக வாங்காமல், ஒரே நேரத்தில் முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அப்போது மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நட ராஜன், மாநில பிற்படுத்தப் பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்பிரமணியம் உடனிருந்தனர்.