முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பில் நளினியின் தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் நளினியும் முருகனும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் மற்றும் லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ஆகியோருடன் தினமும் 10 நிமிடம்வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசஅனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள்என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதாஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘‘இது இருநாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாகக் கூட பேச அனுமதிக்க முடியாது. அதற்கு சிறை விதிகளிலும் இடமில்லை." என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி என்.கிருபாகரன், ‘‘சிறையில் உள்ள முருகன் தனது தந்தையின் மரணம் தொடர்பாக இலங்கையில் உள்ள தனது தாயாருடன் பேசுவதால் என்ன பாதுகாப்பு பிரச்சினை ஏற்படப்போகிறது. முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானதுதான்’’ என கருத்து தெரிவித்தார். அதன்பிறகு நீதிபதிகள் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.