தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டி வட்டம், நாட்றாம்பாளையம் மலைக் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாட்றாம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று, கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'அனைவருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். கூலியாக ரூ.300 வழங்க வேண்டும். ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.7,500 வீதம் அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்’ என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்பு ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அஞ்செட்டி வட்டச் செயலாளர் காவேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.