கரோனா ஊரடங்கு எதிரொலியாக மூடப்பட்டிருந்த பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தை தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாகத் திறக்கப்பட்டுள்ளது.
ஓசூரிலிருந்து தமிழக நகரங்களுக்கு தினசரி 500 டன் வரையிலான காய்கறிகளை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓசூர் ஒன்றியத்தில் உள்ள ஆவலப்பள்ளி, பாகலூர், பெலத்தூர், பூனப்பள்ளி, மத்தம் அக்ரஹாரம், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட ஒன்றியங்களில் காய்கறி விளைச்சல் செய்யப்படுகிறது.
இங்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக கேரட், பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி உள்ளிட்ட தோட்டப் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள இதமான தட்பவெப்பம் மற்றும் பதமான மண் வளம் காரணமாக இப்பகுதியில் விளையும் தரமான மற்றும் சுவை மிகுந்த காய்கறிகளுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து காய்கறி உற்பத்தியில் ஈடுபட்டு கணிசமான அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் முதலில் ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கரோனா எதிரொலியாக இந்த பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தை மூடப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தினசரிக் காய்கறிகளை அனுப்பி வைப்பது நின்று போனது. இதனால் உரிய விலையின்றி விவசாயிகளும் மற்றும் மொத்த விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பத்தலப்பள்ளி சந்தை திறக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளை தமிழகப் பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளி மொத்த வியாபார காய்கறி விற்பனையாளர் சங்கத்தலைவர் ராஜாரெட்டி கூறியதாவது, ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய சந்தைகளில் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தையும் ஒன்றாகும். இங்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும் தினசரி 600 டன் முதல் 800 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இங்கிருந்து வெளி இடங்களுக்கு காய்கறிகளை அனுப்பி வைப்பது நின்றுவிட்டது. இதனால் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை காய்கறி விற்பனைக்கான பணம் வசூலாகாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஊரடங்கு தளர்வினால் கடந்த 1-ம் தேதி முதல் இந்த சந்தை திறக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த பத்தலப்பள்ளி காய்கறிச் சந்தை, தக்காளி சந்தை, வெங்காயச் சந்தை மற்றும் இதர காய்கறிகள் சந்தை என 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது தினசரி 300 டன் முதல் 500 டன் வரை காய்கறிகள் வரத் தொடங்கி உள்ளன'' என்று அவர் கூறினார்.
இதுகுறித்து தளி ஒன்றியம் தோட்டக்கலைத்துறை அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், ''ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் நடப்பாண்டில் காய்கறி விளைச்சல் நன்றாக இருக்கிறது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு காய்கறிகளை அனுப்புவது தொடங்கி உள்ளது. காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்'' என்றார்.